ஆரஞ்சு – குணங்கள்

இனிய கனியான ஆரஞ்சுப் பழத்தின் அற்புத குணங்கள்

இயற்கையில் விளையும் கனிகளில் ஆஞ்சுப்பழத்தின் உன்னத குணங்கள் அளவிட முடியாது. விளம்பர மோகத்தால், தவறான உணவுக் கொள்கையால் நாம் ஆற்றல் தரும் ஆரஞ்சின் நன்மையை அறியாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான இராசயண பானங்களுக்கு அடிமையாகி நோயில் வீழ்ந்து தினம் கஷ்டப்படுகிறோம். ஆரஞ்சு பழத்தின் பெருமையை இனியேனும் அறிவோம். நோயின்றி நலமுடன் வாழும் வழி அறிவோம்.

ஆரஞ்சுப் பழச் சத்துக்கள் விவரம்

நீர்ச்சத்து 86.5% புரதம் 0.6% சர்க்கரை 12.0% கொழுப்பு 0.1% மற்றும் விட்டமின் “ஏ” 120 மி.கி, விட்டமின் “பி” 68மி.கி., விட்டமின் “சி” 19 கிராம், சுண்ணாம்புச் சத்து 14 மி.கி., பொட்டாசியம், கால்சியம், கந்தகம், மக்னீசியம் போன்ற உப்புச் சத்துக்களும் அடங்கியுள்ளன.
ஆரஞ்சுப்பழம் புசிப்பதற்கு ருசியாகவும், போஷாக்கும் உள்ளது. உடனடி தெம்பு தருவது நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம். காபி மற்றும் குளிர் பானங்களுக்குப் பதில் ஆரஞ்சு சாறு சாப்பிட்டு அதன் பலனை எல்லோரும் அனுபவிக்க வேண்டும்.

சாப்பிடும் முறை

மேல் தோலை உரித்து சுளை எடுத்து சாப்பிடலாம். வெண்மை நிற உள் தோலைச் சேர்த்து சாப்பிட்டால் சுண்ணாம்புச்சத்தும் நார்ச்சத்தும் அதிக அளவில் கிடைக்கும். சாறு எடுத்து சாப்பிடுகிறவர்கள் சுவைக்கு வெள்ளைச்சீனி சேர்க்காமல் தேன், வெல்லம், பேரீச்சைச்சாறு சேர்க்கலாம். சிறுவர்களுக்கு மிகவும் பிரியமான உணவு.

குணமடையும் வியாதிகள்

சளி, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாசக் கோளாறு, காச நோய் போன்ற வியாதிகளால் அவதியுறுவோர் பால் உணவுகளை விலக்கி ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டு விரைந்து குணம் பெறலாம். மேலும் உடல் சூடு, கண் பார்வை கோளாறு, சளித்தொல்லை இவை அனைத்தும் சேர்ந்த வியாதி உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு ஏற்ற ஒரே பழம் ஆரஞ்சுப்பழம்.

குடல்புண் நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஓர் அற்புத உணவு, செரிக்கும் சக்தியையும், பசியையும் அதிகப்படுத்துவதுடன் நொந்து போன குடலை விரைந்து சரி செய்கிறது. அழிந்த திசுக்களை புதுப்பிக்கிறது.
இரத்த சோகை, நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்கிறது. பல் வலி, பயரியா போன்ற கோளாறுகளைத்தீர்க்கும் அதிசய உணவு. உடல் சூடு, வெட்டைச்சூடு, மூலவியாதி போன்றவற்றிற்கும், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் உடன் அற்புத பலன் கிட்டும். உடம்பில் மிகுந்துள்ள விஷத்தன்மையை முறித்து காய்ச்சலிலிருந்து உடனே நிவாரணம் தருகிறது. உடல் எடை, மூட்டுவலி, உடம்பில் அதிக உப்புச்சத்து, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் சரியாக இதுவே சஞ்சீவி கனியாக செய்ல்படுகிறது. கர்ப்பமுற்ற பெண்கள் இப்படிச்சாற்றை அதிக அளவல்¢ல் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவார்கள். வெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது.

மேலும் வயிற்று வலி, ஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கை உடன் சரிசெய்கிறது. குழந்தைகளின் பிரைமரி காம்ளக்ஸ் சரியாகிறது.

இயற்கை மருத்துவம் – நடைமுறையிலுள்ள சாறுகள் சில

1. அருகம்புல் சாறு. 2. பூசணிச்சாறு. 3. வாழத்தண்டு சாறு. 4. மணத்தக்காளி இலை சாறு. 5. கேரட் சாறு. 6. வில்வ இலைச்சாறு. 7. நெல்லிச்சாறு. 8. பழங்களின் சாறுகள். 9. இளநீர். 10. தர்ப்பூசணிச்சாறு.
சாறு உண்ணுதல்: கனிச்சாறு, காய்ச்சாறு, இலைச்சாறு உண்ணுகையில் வெறும் சாறாக இன்றி தண்ணீருடன் கலந்தே உண்ணுதல் வேண்டும். ஒரு டம்ளர் சாறு உண்ண 15 நிமிடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூட்டுத்தேய்விற்கு இஞ்சி

ஆஸ்டியோ ஆர்த்தரைட்டில் என்ற மூட்டுத்தேய்வு நோய் உள்ளவர்களுக்கு இஞ்சி ஒரு சிறந்த மருந்தாகும். இஞ்சி சாறு சிறிதளவு அருந்தி வர வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக்கொள்வதால் எவ்வளவு வலி குறைகிறதோ அதே அளவில் வலி குறைகிறதாம். பக்க விளைவுகளும் இல்லை.

இஞ்சியில் உள்ள சில ரசாயண பொருள்கள் வெளியேற்றப்பட்டு வலி, வீக்கம் கனிசமாகக் குறைந்துவிடுகின்றன. இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தேய்ந்த எலும்புகளும் திசுக்களும் மீண்டும் வளரத் தொடங்குகின்றன. சீன மருத்துவத்திலும் இந்திய மருத்துவ முறைகளிலும் இஞ்சிக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது.

தகவல் : ச. குஞ்சிதபாதம் (பொருளாளர், ஆடுதுறை இ.ம.சங்கம்)
4- 732, அக்ரஹாரம், கீழக் கொற்கை கொற்கைத்தோட்டம்.(Po)., சாக்கோட்டை வழி, கும்பகோணம் வடம், 612401 போன் : 0435 – 2427342

தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 27, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: இயற்கை மருத்துவம்

எலுமிச்சை சாகுபடி

எலுமிச்சை சாகுபடி

தமிழகத்தில் பயிராகும் பழ மரங்களில் எலுமிச்சை மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. எலுமிச்சை பழங்கள் பானங்கள் தயாரிப்பதற்கும், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பதற்கும் உதவுகிறது. நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் எலுமிச்சை பயன்படுகிறது.

சாகுபடி பரப்பளவு அதிகம்:
எலுமிச்சை பழத்தில் வைட்டமீன் “சி” நிறைந்துள்ளது. உலகில் ஏறக்குறைய 50 நாடுகளில் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. உலக நாடுகளில் 6- வது இடத்தை இந்தியா வகிக்கிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகம், அசாம், குஜராத், மராட்டியம், பஞ்சாப், உத்திர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. மா, வாழை ஆகியவற்றிற்கு அடுத்தாற்போல் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவது எலுமிச்சை தான்.

எலுமிச்சை பலவிதமான வெப்பநிலைகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் வெப்பம் மிகுந்த தென் மாநிலங்களில் எலுமிச்சை நன்றாக வளர்ந்து நல்ல பலனைத்தருகிறது. எலுமிச்சையை கடல் மட்டதிலிருந்து ஆயிரம் மீட்டர் உயரம் வரை சாகுபடி செய்யலாம். பணி உறையும் பகுதிகளில் இதனை சாகுபடி செய்ய இயலாது.

வடிகால் வசதி

பலவகையான குணங்களை கொண்ட மண்ணில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. களிமண் நிலங்களிலும் தண்ணீர் எளிதில் வடியாத நிலங்களிலும் இதனை சாகுபடி செய்ய முடியாது. மேல் மண் ஆழமில்லாமலும் அடியில் பாறையுடன் இருந்தால் மரம் சில ஆண்டுகளில் நலிந்து இறந்து விடும்.

எலுமிச்சை சாகுபடி செய்யும் தோட்டத்தில் தகுந்த வடிகால் வசதி அமைத்தல் அவசியம். எலுமிச்சை செடி வளர்ச்சிக்கு மண்ணில் கார அமிலத்தன்மை இருத்தல் சிறந்தது. நல்ல வடிகால் வசதியுள்ள இரு மண் பாங்கான குறுமண் நிலம் ஏற்றது.

பெரும்பாலும் விதையில் இருந்து வரும் கன்றுகளை நடுவதற்கு பயன்படுத்த வேண்டும். இலை மொட்டு ஒட்டுதல், பதியன்கள் செய்தல் ஆகிய முறைகளிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மொட்டுக்கட்டுதலினால் உண்டாகும் செடிகள் விரைவிலேயே பலன் தரும். பழங்களும் ஒரே சீரான அளவுடன் தரமுள்ளதாக இருக்கும். ஓராண்டு வயதுடைய கன்றுகள் நடவுக்கு சிறந்ததாகும்.

ரகங்கள்

பி.கே.எம் -1, சாய்சர்பதி, தெனாலி, விக்ரம், ப்ரமாலினி போன்றவை எலுமிச்சையில் உள்ள உயர் விளைச்சல் ரகங்களாகும். இவற்றில் பி.கே.எம்-1, விக்ரம் ஆகிய ரகங்கள் தமிழகத்திற்கு உகந்தவையாகும். எனவே விவசாயிகள் நல்ல மகசூல் தரக்கூடிய எலுமிச்சை ரகங்களை தேர்ந்தெடுத்து, சாகுபடி செய்து அதிக அளவு மகசூலினை பெறலாம்.

தகவல்: தோட்டக்கலைத்துறை, தஞ்சாவூர்.

தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 20, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: எலுமிச்சை

சுய உதவிக் குழு

பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள முடிவுகளைக் கண்காணித்தல்

 1. பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக தீர்மானப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல்.
 2. கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகளின் அடிப்படையில் கையொப்பம் பெறப்பட்டுள்ளதை கவனித்தல்.
 3. சமூக தணிக்கைக் குழுவின் விவாத பொருள் / அறிக்கை உரிய ஆதாங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.
 4. பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பெரும்பான்மையான அளவிற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதா என சரிபார்த்தல்.
 5. விவாதப் பொருள் அனைத்தும் கூட்டத்தின் கலந்துரையாடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.
 6. துணைக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளைக் கண்காணித்தல்.

குழு அமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல் துணைக்குழு

 1. சுய உதவிக் குழு இணையாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு புதிய குழுக்கள் அமைக்க வேண்டும்.
 2. அனைத்துக் குழு உறுப்பினர்களும் உரிய காலத்தில் பயிற்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
 3. வலுவிழந்த / செயல்படாத குழுக்களின் எண்ணிக்கை, செயல்படாததற்கான காரணம் மற்றும் தீர்வு மேற்கொள்ளப்பட்டதற்கான விவரங்களை வைத்து அக்குழுக்களை இயங்கச் செய்ய வேண்டும்.

செயற்குழு உறுப்பினர்களின் பணிகள்

 1. கண்காணித்தல் பணியை பொதுவாக பொறுப்பாளர்களைக் கொண்டு மேற்கொள்ளச் செய்ய வேண்டும். பொறுப்பாளர்கள் முறையாக பிற அமைப்புகளை கண்காணித்து அறிவுரைகள் வழங்கிய விவரத்தினை செயற்குழுவில் பதிவு செய்ய வேண்டும்.
 2. குடியிருப்பு மன்றம் சுய உதவிக் குழுவிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை செயற்குழு கூட்டத்தில் வைத்து விவாதிக்க வேண்டும்.

தகவல் மூலம்:  தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

தகவல் அனுப்பியவர் : பி தமிழ் இலக்கியா, ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 20, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , ,  · Posted in: சுய உதவிக் குழு

குறுவை அதிக மகசூல் பெற

குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் முறைகள்:

விதை நேர்த்தி:

நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் இந்த பருவத்தில் ஏ.டீ.டி 36, ஏ.டீ.டி 43, ஏ.டீ.டி 45, ஏ.டீ.டி 16, ஏ.டீ.டி 18, ஏ.டீ.டி 5 மற்றும் வீரிய ஒட்டு இரகங்களான ஏ.டீ.டி,அர்.எச் 1, கோ.ஆர்.எச் 1 ஆகிய இரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதைகள் போதுமானது.

இவ்வாறு தேர்வு செய்த விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். 1 கிலோ விதைக்கு 10 கிலோ சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் மருந்தை வைத்தபின்பு தண்ணீரை வடித்து 24 மணி நேரம் கழித்து விதைப்பு செய்ய வேண்டும். இதனால் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். பின்னர் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

ஒரு எக்டேருக்கு தேவையான 50 கிலோ விதையுடன் 5 பொட்டலங்கள் அஸோஸ்பைரில்லம் மற்றும் 5 பொட்டலங்கள் பாஸ்போ பாக்டீரியவினை தேவையான அளவு கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் பயிர்களுக்கு இயற்கையாகவே காற்றில் உள்ள தழைச்சத்து கிடைத்து நன்றாக வளரும்.

நாற்றங்கால் தயாரிப்பு:

ஒரு எக்டேருக்கு 20 செண்ட் நாற்றங்கால் தேவை. இந்த நாற்றங்காலுக்கு அடியுரமாக ஒரு டன் தொழு உரம் இட வேண்டும். சென்டிற்கு 2 கிலோ வீதம் டி.ஏ.பி யை அடியுரமாக இட வேண்டும். நாற்றுகளை 25 முதல் 30 நாட்களுக்குள் பறித்து நட முடியாத நிலையில் நாற்றுகளை பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு சென்டுக்கு ஒரு கிலோ டி.ஏ.பி இட வேண்டும். இதனால் தரமான நாற்றுகளை இட வேண்டும். நாற்றங்காலில் 10 பொட்டலங்கள் அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். இதனால் தரமான நாற்றுகளை பெறலாம்.

நடவு வயல் தயாரித்தல் :

நடவு வயலில் உழவிற்கு முன்பாக எக்டேருக்கு 12.5 மெட்ரிக் டன் தொழு உரம், கம்போஸ்ட், பசுந்தாள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நடலாம். இதன்படி ஒரு எக்டேருக்கு பசுந்தாள் உரம் 6.25 மெட்ரிக் டன் இட வேண்டும். நடவு வயலில் எக்டேருக்கு 10 பொட்டலங்கள் அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

மண் ஆய்வுப்பரிந்துரையின்படி ரசாயண உரங்கள் இட வேண்டும். இதனால் தேவையற்ற உரச்செலவை குறைக்கலாம். மண் ஆய்வு மேற்கொள்ளாத நிலையில் பொது பரிந்துரையாக எக்டேருக்கு 40 கிலோ தழைச்சத்து, 38 கிலோ மணிச்சத்து, 19 கிலோ சாம்பல்ச்சத்து ஆகியவற்றை இட வேண்டும்.

நுண்ணூட்ட உரமிடல்:

நடவு செய்வதற்கு முன்பாக எக்டேருக்கு 25 கிலோ சிங்க்சல்பேட் உரத்தினை மணலுடன் கலந்து இட வேண்டும். முதல் மேலுரமாக நடவு செய்த 15- ம் நாளில் 40 கிலோ தழைச்சத்து மற்றும் 9.5 கிலோ சாம்பல்சத்து இட வேண்டும். தழைச்சத்துடன் 5க்கு 1 என்ற விகிதத்தில் வேப்பம் புண்ணாக்கு கலந்து இட வேண்டும். 2 வது மேலுரமாக நடவு செய்த 30 வது நளில் 40 கிலோ தழைசத்து மற்றும் 9.5 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.

நடவின் போது 2 சென்டி மீட்டர் அளவு நீரும், பயிரின் முக்கிய பங்குகளான பஞ்சுக்கட்டுதல், பொதி பருவம் கதிர் வெளிவருதல் மற்றும் பூப்பருவத்தில் 2.5 செ.மீ உயரத்திற்கு தண்ணீர் இருக்குமாறு நீர்ப்பாய்ச்சுதல் அவசியமாகும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு :

நாற்றங்காலில் இலைப்பேனை கட்டுப்படுத்த 5 சதவீதம் வேப்பம் கொட்டைக்கரைசலை தெளிக்க வேண்டும்.

நடவு வயலில் இலைச்சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், புகையான் மற்றும் பச்சைத்தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு கலந்த யூரியா இடலாம். யூரியாவுடன் பொட்டாஷ் கலந்து பிரித்து இடலாம். பாத்தி நடவு மற்றும் நீர் மேலாண்மையில் பாய்ச்சலும், காய்ச்சலும் என்ற முறையை கடைபிடிக்கலாம். மேலும் வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

நோய் பாதிப்பு ஏற்பட்டால் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் 5 கிராமினை, ஒரு லிட்டர் நீரில் கலந்து நடவு செய்த 45 – வது நாளில் இருந்து 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி குறுவை சாகுபடியில் அதிக அளவு மகசூலினை பெறலாம்.

தகவல்: வேளாண்மைத்துறை, தஞ்சாவூர்.

தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

 

June 18, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , ,  · Posted in: குறுவை சாகுபடி

குரும்பை உதிர்வு

தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க 

தென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத்தரும் முக்கிய பிரச்சனைகளாகும்.

காய்க்க ஆரம்பிக்கும் இளம் மரங்களில் குரும்பை உதிர்வதை தடுக்க முடியாத பண்பாகும். எனினும் நல்ல காய்ப்பிற்கு வந்த தென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பெண் பூக்கள் உதிர்கின்றன.

காரணங்கள்:

குரும்பைகள் மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் தாவர உடற்செயலில் குறைபாடு, மண்ணின் குணம்( உவர், களர் தன்மை), மண்ணில் ஊட்டச்சது பற்றாக்குறை, நீர் நிர்வாகக் குறைபாடு போன்ற காரணங்களைக்குறிப்பிடலாம்.

மண்ணின் குணம் :

மண்ணின் கார, அமிலத் தன்மை 5 சதத்துக்கு குறைவாகவோ அல்லது 8 சதத்துக்கு அதிகமாகவோ இருக்கும்போது, குரும்பைகள் கொட்டுவது இயல்பாகும்.

ஆகையால், அமிலத் தன்மை அதிகமிருக்கும் மண்ணில் மரத்திற்கு சுண்ணாம்புச்சத்து இட்டும், காரத்தன்மை அதிகமிருக்கும் மண்ணில் ஜிப்சம் இட்டும் உவர், களர் தன்மையச் சரிசெய்யலாம்.

கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள்: யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ மற்றும் மூரியேட் ஆப் பொட்டாஷ் 2 கிலோ ஆகியவற்றை 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து, ஒவ்வொரு மரத்திற்கும் இட வேண்டும்.

மேலும், தென்னை டானிக் 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேர் மூலம் உட் செலுத்துவதன் மூலம் குரும்பை பிடிப்பதை அதிகரிக்கச் செய்யும்.

தென்னை நுண்ணூட்டக் கலவையை மரத்திற்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இந்த நுண்ணூட்டக்கலவையில் தென்னைக்கு தேவையான அனைத்து நுண் சத்துக்களும் உள்ளன.

தென்னை நுண்ணூட்டக் கலவையை மரத்திற்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இந்த நுண்னூட்டக் கலவையில் தென்னைக்கு தேவையான அனைத்து நுண் சத்துக்களும் உள்ளன.

நீர் நிர்வாகக் குறைபாடு:

மார்ச் ஏப்ரல் மாதங்களில் அதிகமாகக் குரும்பை உதிர்வு ஏற்படுகிறது. கடுமையான வறட்சி மழை பெய்த பின்பும் அல்லது நீண்ட காலமாக நீர் பாய்ச்சாமல் பராமரிப்பின்றி இருக்கும் தென்னந் தோப்புகளில் குரும்பை பிடிப்பு அதிகம் இல்லாமலும், மட்டைகள் துவண்டு தொங்குவதும் காணப்படும்.

தென்னை வேர்களுக்கு காற்றோட்டம் கிடைப்பதற்கு போதுமான வடிகால் வசதி செய்தல் அவசியமாகிறது. இல்லாவிடில், இளம் கன்றுகள் வளர்ச்சி குறைந்து, இலைகள் மஞ்சள் நிறமாகின்றன. மேலும் வளர்ந்த மரங்களில் குரும்பைகளும், இளங்காய்களும் உதிர்வதற்கான வாய்ப்பு உருவாகிறது. நவம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரை தொடர் நீர்ப்பாசனம் மற்றும் நல்ல வடிகால் வசதியும் செய்தால், 6 முதல் 9 ஆண்டுகள் வரை நல்ல நிலையான மகசூல் கிடைக்கும்.

மகரந்த சேர்க்கை குறைபாடு :

தென்னையில் அயல் மகரந்த சேர்க்கையில் கருவுறுதல் ஏற்பாடு, குரும்பைகள் காய்களாக வளர்ச்சி பெறுகின்றன. காற்றினாலும், தேனீக்கள் போன்ற பூச்சிகளாலும் தென்னையில் அயல் மகரந்தச்சேர்க்கை நிகழ்கிறது.

அதிக மழை பொழிவால் மகரந்தச் சேர்க்கையின்மை மற்றும் மகரந்த சேக்கை ஏற்படுத்தும் காரணயின்மையினாலும் குரும்பைகள் உதிர்கின்றன.

பயிர்வினை ஊக்கிகளின் குறை மற்றும் தேவை:

குரும்பைகள் வளர்ச்சிக்கு பயிர் வினை ஊக்கிகள் தேவைப்படுகின்றன. இவற்றின் உற்பத்தி தேவையான அளவுக்கு இல்லாத போது குரும்பைகள் உதிர்வதுண்டு.

பயிர் வளர்ச்சி ஊக்கியான நாப்தலின் அசிட்டிக் அமிலத்தை (பிளானோபிக்ஸ்) பாளைகள் வெடித்து ஒரு மாதம் கழித்து அரை மில்லி அளவை ஒரு லிட்டர் சுத்தமான நீரில் கலந்து பாளைகளில் தெளிப்பதன் மூலம் தடுக்கலாம்.

பூச்சிகள் மற்றும் நோய்கள்:

பாளைகள் வெடித்து குரும்பைகள் கருவுறும்போது, சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் பூசணத்தினால் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

பொதுவாக, கொலிடோடிரைகம் பூசணத்தினால் குரும்பைகளின் திசுக்களில் பசை வடிவத்தில் ஏற்பட்டு உதிர்வு ஏற்படுகிறது.

மேலும், அஸ்பொஜில்லஸ் பென்சிலியம், பைட்டோப்தோரா, ப்யுஸோரியம், பெஸ்டலேசியா போன்ற பூசணங்களினாலும் குரும்பைகள் உதிர்வு ஏற்படுகிறது.

இந்தக் காரணங்களை கண்டறிந்து தேவையான மருந்துகளை அளவுடன் உபயோகிப்பதன் மூலம் குரும்பைகள் உதிர்வதை தடுக்கலாம்.

போரான் குறைபாடு:

போரான் என்ற நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையினால் தென்னை இலைகள் சிறுத்து, விரிவடையாமல் காணப்படும். இது கொண்டை வளைதல் அல்லது இலை பிரியாமை என்று அழைக்கப்படுகிறது.

சுமார் மூன்று ஆண்டுகள் வயதுடைய மரங்களில் இலைகள் சாதாரண முறையில் விரிவடையாமல் ஒன்றுக்கு ஒன்று பின்னிக் கொண்டு வெளி வர இயலாத நிலையில் காணப்படும்.

சுமார் மூன்று ஆண்டுகள் வயதுடைய மரங்களில் இலைகள் சாதாரண முறையில் விரிவடையாமல் ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு வெளிவர இயலாத நிலையில் காணப்படும்.

மேலும், வளர்ந்த மரங்களில் இலைகளின் வளர்ச்சி மிகவும் குறைந்து மட்டைகள் குருத்து பாகத்திலிருந்து வளைந்து காணப்படும். குறைபாடு முற்றிய நிலையில் குரும்பைகளும், இளம் காய்களும் கொட்டுவதற்கு வாய்ப்பு உருவாகிறது.

இதைத் தவிர்க்க, மண்ணில் 250 கிராம் போராக்ஸ் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தனியே வைத்து (மற்ற உரங்களுடன் கலக்காமல்) இரண்டு வருடங்களுக்கு தொடர்ச்சியாக இட வேண்டும். ( அல்லது ) வேர் மூலம் 25 மில்லி அளவு போரான் கரைசலை செலுத்துவதால் மரம் போரான் குறைபாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறது.

தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், குரும்பை உதிர்வதின் காரணங்களைக் கண்டறிந்து உரிய தடுப்பு முறைகளை மேற்கொண்டு நல்ல மகசூல் பெறலாம்.

தகவல்: எம்.பெருமாள், வேளாண்மை இணை இயக்குநர், புதுக்கோட்டை, [தினமணி நாளிதழ், நாள்:14-06-2012]

தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 18, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , ,  · Posted in: தென்னை

நெற்பயிர்ப் பாதுகாப்பு

பூச்சி நோய்களில் இருந்து நெற்பயிர்களைப் பாதுகாப்பது எப்படி?

தமிழகம், புதுச்சேரியில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக நெற்பயிரில் சேதத்தை விளைவிக்கக் கூடிய பூச்சிகளும், நோய்களும் அதிகரித்துள்ளன. அவற்றை சரியான மருந்துகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.

புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் (விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம்) தற்போது நடைபெறும் சொர்ணவாரி மற்றும் குறுவை பருவங்களில் ஆடுதுறை 37 மற்றும் ஆடுதுறை 43 போன்ற நெல் ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த நெல் ரகங்களில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக செஞ்சிலந்தி, குருத்துப்பூச்சி போன்ற பூச்சிகள் தாக்குகின்றன. மேலும் பாக்டீரிய இலை கருகல் நோயும் அதிகமான தாக்குதலை ஏற்படுத்தி உள்ளன.
இப்பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் நெல் பரியில் அதிக மகசூல் பெற முடியும்.

செஞ்சிலந்தி:

செஞ்சிலந்தி என்பது கொசுவை விட மிகச் சிறிய அளவில் இருக்கும். இது எண்ணிக்கையில் அதிகமாக உருவாகி நெற்பயிரியின் இலைச் சோலையின் மேற்பரப்பில் அமர்ந்துக் கொண்டு சாற்றை உறிஞ்சும்.
இதனால் இலை பச்சையத்தை இழந்து மஞ்சள் நிறமாக மாறும். குறிப்பாக சிகப்பு நிறத்தில் உள்ள செஞ்சிலந்திகள் இலைப் பகுதியில் நடுப்பரப்பில் தாக்குதலை ஏற்படுத்தும். இத்தகைய செஞ்சிலந்திகளை உருப்பெருக்கி வழியாகவே பார்க்க முடியும்.

தடுக்கும் முறைகள்:

 1. தாக்குதல் குறைவாக இருப்பின் அல்லது தாக்குதல் வரக்கூடிய அறிகுறி தென்பட்டவுடன் ஒரு சத புங்கம் எண்ணெய்யை இலையின் நடுப்பகுதி நனையுமாறு தெளிக்க வேண்டும்.
 2. தாக்குதல் மத்தியமாக இருப்பின் ஒரு லிட்டர் நீருக்கு 4மிலி என்ற அளவில் டெட்ராடி•பான் 8 இ.சி தாக்குதல் பென்புரோபாத்ரின் 20 இ.சி தெளிக்க வேண்டும்.
 3. தாக்குதல் அதிகமாக இருப்பின் டைக்கோபால் 18 இ.சி ஒரு லிட்டர் 2 மிலி அல்லது நனையும் கந்தகத் தூள் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அலவில் தெளிக்க வேண்டும்.

குருத்துப் பூச்சி:

குருத்துப் பூச்சியினுடைய புழுக்கள் இளம் பயிர்களின் நடுத்தண்டினையும் வளர்ந்த பயிர்களின் நடு குருத்துகளையும் தாக்குவதால் வெண்மை கதிர்கள் உருவாகி நெல் மணிகள் சாவிகளாகவும் பதர்களாகவும் மாறும்.

நிர்வாக முறைகள்:

 1. ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறியை மாலை வேளைகளில் அமைக்க வேண்டும். விளக்குப் பொறியில் 200 வாட்ஸ் குமிழ்பல்பு பொருத்த வேண்டும். பல்பினை மாலை 6மணிமுதல் 10 மணி வரை மட்டுமே எரியச் செய்ய வேண்டும்.
 2. ஒரு ஏக்கருக்கு 5 இனக் கவர்ச்சிப் பொறி அமைக்க வேண்டும்.
 3. ஒரு ஏக்கருக்கு 2 சிசி டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணி அட்டையை 12 இடங்களில் கட்ட வேண்டும்.
 4. ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் 3 சத வேப்ப எண்ணெயுடன் 100 கிராம் காதி சோப்பு கலந்து நடுத்தண்டு நனையும்படி தெளிக்க வேண்டும்.
 5. தாக்குதல் அதிகமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ பெவேரியா பேசியானா என்ற உயர்ரக பூஞ்சாணக்கொல்லி அல்லது 250 கிராம் பேசிலஸ் துருஞ்சியன்சிஸ் என்ற உயர் ரக பாக்டீரிய கொல்லியை பயன்படுத்தலாம்.

பாக்டீரிய இலைக் கருகல் நோய்:

பாக்டீரியல் இலைக் கருகல் நோயானது நெற்பயிரின் இலைச் சோலையின் விளிம்பு ஒரங்களில் மஞ்சள் நிறத்தில் தாக்குதலை ஏற்படுத்தும்

தடுக்கும் முறைகள்: 

 1. நெற்பயிரின் வயலில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
 2. பன்னிரெண்டு மணி நேரம் 100 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து இருபது சத சுத்த பசுஞ்சாணத்திலிருந்து பெறப்பட்ட சுத்த சாண நீரினை ஒரு ஏக்கர் வயலில் இலையின் ஒரங்கல் நனையுமாறு மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
 3. ஒரு ஏக்கர் 120 கிராம் அக்ரிமைசின் அல்லது பாக்டீரிமைசின் 2000 என்ற ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் டெட்ராசைக்ளின் கூட்டுக் கலவை அல்லது காப்பர் ஆக்சிக்குளோரைடு ஒரு ஏக்கருக்கு 500 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
 4. தாக்குதல் அதிகமாக இருந்தால் கோசைட் என்ற மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார்.

இப்பூச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் நெல் பரியில் அதிக மகசூல் பெற முடியும்.

தகவல்: விஜயகுமார், பூச்சியல் துறை வல்லுநர், காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம், புதுச்சேரி. [Dinamani daily news 31-05-2012]

June 15, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

எலி கட்டுப்பாடு

எலிகளைக் கட்டுப்படுத்தும் இயற்கை முறை

கடந்த சில ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைக் குறைப்பதில் எலிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

நமது நாடு முழுவதும் உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 2 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சேதத்தையும் இழப்பையும் எலிகள் ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மிக அதிகளவு எலி தாக்குதலை குறிப்பிட்ட கால அளவில் கட்டுப்படுத்தவில்லை என்றால் சேதத்தின் அளவு நூறு சதவீதம் வரை உயர்ந்துவிடும் அபாயமும் உள்ளது.

இத்தகைய நடைமுறை சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள் நடுத்தர விவசாயிகள் மிகக் கடுமையான பொருளாதார இழப்பீடுகளை ஏற்படச் செய்யும் எலிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது எப்படி என தெரிந்துகொள்வது அவசியமாகும்.

இயற்கை முறையிலான எலிக்கட்டுப்பாடு குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவின் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.

நமது நாட்டில் எலிக்கட்டுப்பாட்டில் இந்தியா கழுகு ஆந்தை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் மலை அடிவாரங்களில் காட்டுப்பகுதி மரங்களில் சிறிய குன்றுகளில் வசிக்கும் இவை எலிகளை உணவாக உட்கொள்ளும்.

எனவே தமிழக விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் பெரிய மரங்களில் உள்ள ஆந்தை இருப்பிடங்களுக்கு எந்த விதமான சேதத்தை ஏற்படச்செய்யாமல் பாதுகாப்பது அவசியம்.

பின்னர் தங்கள் தோட்டங்களில் பறவை தாங்கிகளை அமைக்கவேண்டும். இரவு நேரங்களில் பறவை தாங்கிகளுக்கு வரும் ஆந்தைகள் எலிகளை உணவாக உட்கொள்ளும்.

காலை நேரங்களில் பிற பறவை வந்து அமர்ந்து பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொள்வதால் எளிதாக விவசாயிகள் எலிகள் மற்றும் பூச்சி தாக்குதல்கள் வாயிலாக ஏற்படும் உற்பத்தி இழப்புகளை எளிதாக தடுக்கமுடியும்.

தற்போதைய நடைமுறை சூழ்நிலையில் மிகவும் குறைந்த செலவில் இயற்கை முறையில் உற்பத்தி பெருக்கத்தை எளிதாக பெறமுடியும். மேலும் விவசாய நிலங்களில் எலிகளை கட்டுப்படுத்த புள்ளி ஆந்தைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றிற்கு செயற்கையாக இருப்பிடப் பெட்டிகள் அமைத்து எலிகளை கட்டுப்படுத்தும் வேளாண் முயற்சிகளை சில மாநிலங்களில் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இயற்கை எலிக்கட்டுப்பாடு முறையின் பிற பயன்கள்:

சமுதாய எலிகளைக் கட்டுபடுத்தவனப்பகுதிகளை, மரங்களைப்பாதுகாப்பது. வாயிலாக பல இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

வன மற்றும் மரப்பொருள்கள் வாயிலாக பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் ஆந்தைகள் சில வகையான சிறிய பாம்புகள் தேள்களை உணவாக உட்கொள்ளுவதால் விவசாயிகளின் உயிருக்கும் நல்லப் பாதுகாப்பு அரணாக அமையும்.

எனவே சமுதாய அளவில் கிராம புறங்களில் ஆந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டியது அவசியமாகும்

தகவல்: முனைவர் தி. ராஜ்பிரவின், உதவிப்பேராசிரியர், வேளாண் விரிவாக்கத் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 14, 2012 · MSSRF · No Comments
Tags: , , , ,  · Posted in: விவசாயம்

கோடையில் தென்னை பராமரிப்பு

கோடையில் தென்னை தோப்பு பராமரிப்பு முறைகள்

 • இதுவரை வேலி அமைக்காமல் இருந்தால் உயிர்வேலியோ, முள்கம்பி வேலியோ அமைத்து கன்றுகளுக்கு ஆடு மாடுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
 • சென்ற பருவத்தில் நட்ட தென்னங்கன்றுகட்கு தென்னங்கீற்று அல்லது பனை மட்டைகளைக் கொண்டு கோடையில் நிழல் கொடுக்க வேண்டும்.
 • பாசனநீர் வசதி உள்ளவர்கள் நேரடியாக வாய்க்கால் மூலம் நீர்ப்பாய்ச்சலாம். தண்ணீர் வசதி குறைவாக உள்ளவர்கள் சொட்டு நீர்ப்பாசன முறையைப் பின்பற்றி தேவையான நீரை கன்றுகளுக்கு அளிக்கலாம். இதுவும் முடியாதவர்கள் பானைமுறை(Pitcher Pot) மூலம் ஒவ்வொரு கன்றுக்கும் பானையைப் புதைத்து நீர் ஊற்றி கன்றுகளுக்கு அளிக்கலாம்.
 • மேற்கண்ட ஏதாவது ஒரு முறையில் கண்டிப்பாக நட்ட கன்றுகளுக்கு நீர்பாய்ச்சினால்தான் தென்னை குறித்த காலத்தில் பூத்து காய்க்க ஆரம்பிக்கும்.
 • ஒரு வறட்சி தாங்கும் முறையாக எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் 3 அடி ஆழம் குழி தோண்டி 2 அடி ஆழத்தில் தென்னங்கன்றை நட வேண்டும். இவ்வாறு நடப்பட்ட கன்றுகள் வறட்சியைத் தாங்கி வளர்வதோடு, விரைவில் பூக்கவும் காய்க்கவும் ஆரம்பிக்கின்றன. அதிக வேர்கள் உற்பத்தியாவதால் பலத்த காற்றையும் புயலையும் தாங்கும் தன்மையும் உண்டாகிறது.

தகவல்: வானொலி உழவர் சங்க செய்திக்கதிர், ஏப்ரல் 2012

தகவல் அனுப்பியவர் – வினோத் கண்ணா, ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புதுக்கோட்டை

June 13, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: தென்னை

கோடையில் தென்னை பராமரிப்பு

கோடையில் தென்னை தோப்பு பராமரிப்பு முறைகள்

தோப்பு பராமரிப்பு

பருவமழை துவங்கும்போதும், முடியும் போதும் நடுவில் மழைக்காலத்திலும் தோப்பை நன்கு உழ வேண்டும். கோடைமழை பெய்வதால் இடையழவு செய்யலாம். இடையழவு செய்வதால் மழை நீர் தோப்பிலேயே ஈர்க்கப்படும். வேர்களுக்கு காற்றோட்டம் கிடைத்து நன்கு வளர்ந்து பயிரூட்டங்களையும் தண்ணீரையும் நன்கு எடுத்துக்கொள்ளும். களைகள் நீக்கப்படுகின்றன. தேங்காய் மகசூல் கூடும்.

 • தோப்பில் பளை,கூராஞ்சி,அடிமட்டை,பன்னாடை,ஓலை மற்றும் குப்பை கூளங்களை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்க வேண்டும்.
 • ஓலைகளைச் சேகரித்து கீற்று பின்னலாம். கரையான புற்றுக்கள் இருந்தால் அவற்றை முழுவதுமாக வெட்டி எடுத்துவிட வேண்டும்.
 • பூச்சி மற்றும் பூஞ்சாணங்கள் தாக்கப்பட்டு இறந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
 • காண்டாமிருக வண்டின் புழுக்கள் குப்பைக்குழியில் வளர்வதால் தென்னந்தோப்பில் குப்பைக்குழிகள் இருந்தால் அவற்றை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
 • அடிமரங்களில் அரிவாள் கொண்டு கொத்தி காயம் ஏற்படுத்தக்கூடாது.
 • கோடைக்காலத்தில் குரும்பைகள் அதிக அளவில் கொட்டினால் பிளானோபிக்ஸ் என்னும் பயிர் ஊக்கியை 8மி.லிக்கு 18லிட்டர் தண்ணீர் கலந்து பாளை வெளிவந்த 30வது நாளில் பாளையின் மீது கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். ஒரு பாளைக்கு அரை லிட்டர் போதும், மீண்டும் 15 நாட்கள் கழித்து ஒருமுறை இதைத் தெளிக்க வேண்டும். இதனால் குரும்பைகள் அதிகம் உதிராமல் காய்களாக மாறும்.
 • ஒவ்வொரு தென்னை மரத்தைச் சுற்றியும் 2மீட்டர் சுற்றளவில் 30செ.மீ ஆழத்திற்கு உரிமட்டைகளை நார்ப்பகுதி மேலே இருக்கும்படி மண்ணில் புதைக்க வேண்டும். இதனால் பாய்ச்சப்படும் நீரும், மழை நீரும் சேமிக்கப்பட்டு சிறிது சிறிதாக மரத்திற்கு கிடைக்கும்.

தகவல்: வானொலி உழவர் சங்க செய்திக்கதிர், ஏப்ரல் 2012.

தகவல் அனுப்பியவர் – வினோத் கண்ணா, ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புதுக்கோட்டை

June 13, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: தென்னை

கண்காணித்தல்

சுய உதவிக்  குழுக்களை - கண்காணித்தல் வழிமுறைகள்:

ஒர் அமைப்பானது / நிறுவனமானது பல்வேறு செயல் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தும் போது அச்செயல்பாடுகளை தொடர் கண்காணித்து வழிப்படுத்தும் போதுதான் அச்செயல்பாட்டினால் நல்ல முறையில் விளைவுகள் / பயன்கள் ஏற்படுகிறது.

கண்காணிப்பதற்கான கீழ்வரும் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தலாம்:

1. அறிக்கைகள் பெறுதல்.
2. களப்பார்வை
3. இடைநிலை மதிப்பீடு
4. ஆய்வுகள்
5. ஆவணப்படுத்துதல்

கண்காணித்தலின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

 1. குடியிருப்பு மன்ற அளவில் தகுதி உள்ள அனைத்துக் குழுக்களும் குடியிருப்பு மன்றத்தில் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தல்
 2. குடியிருப்பு மன்ற செயல்பாடுகள் இலட்சியம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் செயல்படுவதை தொலை நோக்குப் பார்வையுடன் கண்காணித்தல்
 3. கூட்டமைப்பின் நோக்கங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடு குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்தல்
 4. நிறைவேற்றப்பட்டுள்ள செயல்பாடு வரையறுக்கப்பட்டுள்ள இலக்கு மக்களை சென்றடைந்தவற்றை உற்று கவனித்தல்
 5. வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளின் அடிப்படையில் நிறை குறைகளை ஆராய்ந்து ஆய்வின் அடிப்படையில் குறை இருப்பின் தக்க ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுதல்
 6. புதிய குழுக்கள் அமைத்தல் மற்றும் நலிவுற்றக் குழுக்களை வலுப்படுத்துதல் பற்றிய விபரங்கள் உள்ளாதா என கண்காணித்தல்
 7. அனைத்துக் குழுக்களுக்கும் பயிற்சி, தரம் பிரித்தல், வங்கிக் கடன் இணைப்பு செய்யப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய பட்டியல் சரிபார்த்தல்
 8. சுய உதவிக் குழுக்களிலிருந்து பெறப்பட்ட கடன் மனுக்களை உரிய முறையில் பெறப்பட்டுள்ளதா என அறிதல்
 9. குடியிருப்பு மன்ற அளவிலான மாதாந்திர அறிக்கை கூட்டமைப்பிற்கு முறையாக அனுப்பப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்தல்
 10. கூட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் / தீர்மானங்கள் குழுக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தல்.
 11. குடியிருப்பு வாரியாக தொழில் செய்திட வளங்களை வரிசைப்படுத்தி அடையாளம் கண்டறிந்தவற்றை கண்காணித்தல்
 12. அனைத்து குழுக்களின் உறுப்பினர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதை குடியிருப்பு நிர்வாகிகள் உதவியுடன் கண்காணித்தல்
 13. குழுக்கள் பெற்ற கடன் தொகையை தவணை தவறாமல் திரும்பச் செலுத்துவதை தொடர் கண்காணிப்பு செய்தல்
 14. குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முறையான விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை கண்காணித்தல்.

தகவல் மூலம்:  தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

தகவல் அனுப்பியவர் : பி தமிழ் இலக்கியா, ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

June 12, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: சுய உதவிக் குழு


Powered By Indic IME