கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

நன்றாக முற்றிய கறிவேப்பிலை 100 கிராம் எடுத்து சுக்கு 25 கிராம், கடுக்காய்த்தோல் 50 கிராம் இவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி ஒரு சிட்டிகைபொடியை வெந்நீரில் இரு வேலை குடித்து வர அழிந்துப் போன சுரப்பிகள் புதுப்பிக்கப்பட்டு ருசியில்லாத நாக்கில் ருசி ஏற்படும். நாம் உண்ணும் உணவுகள் சீர் பெறாமல் வயிற்றில் உளைச்சலைக் கொடுத்தால் அதைச் சமப்படுத்தும். வாத, பித்தங்கள், உடலில் எங்காவது ஒலிந்துக் கொண்டு இருந்தால் அவற்றைப் வெளியேற்றும். கறிவேப்பிலை இலையைக் கைப்பிடிஅளவு, மிளகாய் 2 இவற்றை நெய்யில் வதக்கி பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையல் செய்து சாப்பிடும் போது முதல் வாய் உணவுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட குமட்டல், வாந்தி, அசீரணபேதி, சீதபேதி, செரியா மந்தம், வயிற்றுக் கோளாறு குணமாகும்.

கறிவேப்பிலை இலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலையின் தண்டு, கைப்பிடி அளவுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவி வர பித்தநரை, இளநரை மாறும்.

கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொரித்த பெருங்காயம் சம அளவாக எடுத்து நிழலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை நெய்விட்டு பிசைந்து சுடுசோறுடன் கலந்து உண்ண மலச்சிக்கல், பேதி நிற்கும். குடல் பலவீனத்தால் ஏற்படுகின்ற பேதியும் நிற்கும்.

கறி வேப்பிலையை தொடர்ந்து உணவில் உபயோகித்துவர சளி, கபநீர்க்கட்டு அடங்கும். கறிவேப்பிலை, ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி நான்கு வேலை 50 மில்லி வீதம் குடித்து வர சளி, இருமல், காய்ச்சல், வாதக் காய்ச்சல் குணமாகும்.

தகவல்: ரேவதி செல்வராஜ், திருப்பழனம்

தகவல் அனுப்பியவர் : முருகன், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

March 22, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: இயற்கை மருத்துவம்


Powered By Indic IME