நெல்லில் விதை நேர்த்தி!

காய்ந்த விதைகளை விதை நேர்த்தி செய்வதைவிட ஈர விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.  முதலில் பூஞ்சானக் கொல்லி விதை நேர்த்தி செய்யவேண்டும்.  ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பன்டை சிம் ம்ருந்தின் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 24 மணி நேரம் விதைகளுடன் ஊறவைத்து முளை கட்டி வைக்கவேண்டும்.  இவ்வாறு செய்வதால் நாற்றுக்களை சுமார் 40 நாட்களுக்கு குலை நோய் வராமல் பாதுகாக்கலாம்.  ரசாயன பூச்சிகொல்லி மருந்துக்குப் பதிலாக உயிர் எதிர் பூசனக் கொல்லி மருந்தான சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் பாக்டீரியாவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம்.

பூஞ்சானக் கொல்லி விதை நேர்த்தி செய்த 24 மணி நேரத்திற்கு பிறகு அசோஸ்பைரில்லம் விதை நேர்த்தி செய்யவேண்டும்.  ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன்  (2 பாக்கெட்) 400 கிராம் அசோஸ் பைரில்லத்துடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.

உலர் விதை நேர்த்தி :  ஈரவிதை நேர்த்தி செய்ய இயலாவிடில் உலர் விதை நேர்த்தி முறையைக் கையாளலாம். பூஞ்சானக் கொல்லி மருந்துகளான கார்பென்டாசிம், திரம் அல்லது கேப்டான் இதில் ஏதேனும் ஒன்றை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் நெல் விதைகளுடன் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்பு ஊறவைக்க வேண்டும்.  இதற்காக விதைகளை நீரில் ஊறவைத்து (சுமார் 24 மணி நேரம்) கோணிச்சாக்கில் 1 முதல் 2 நாட்கள் ஈரம் காயமல் கட்டி வைத்து முளைகட்டவேண்டும்.  முளை வந்துள்ள விதையில் முளையின் நீள்ம் 3 மி.மீ. முதல் 5 மி.மீ. வரை இருக்கலாம்.  விதைகள் சீராக முளைப்பதற்கு தேவைப்பட்டால் முளைக்கப்பட்ட விதைளை கலக்கவேண்டும்.

கடைசி உலவிற்கு முன்பாக 8 சென்ட் நாற்றங்காலுக்கு 16 கிலோ டை  அம்மோனியம் பாஸ்பேட் உரம் இடவேண்டும் (அல்லது 6.3 கிலோ யூரியா, 48 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் இடலாம்).  உரிய வயதில் நாற்றுக்களை பறிப்பதாக இருந்தால் டிஏபியை நாற்றங்காலில் அடியுரமாக இடலாம்.  நாற்று பறிப்பதற்கு தாமதம் ஆகும் பட்சத்தில் நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு இடலாம்.

களிமண் பாங்கான நாற்றங்காலில் நாற்றுக்களின் வேர்கள் பறிக்கும் போது அறுத்துவிட வாய்ப்புள்ளது.  ஆகவே, வேர்களின் அதிக வளர்ச்சியை தடுக்க  டிஏபி உரத்தை நாற்றங்காலில் விதைத்த 10 நாட்களுக்குப் பிறகு ஒரு சென்டிற்கு ஒரு கிலோ என்ற அளவில் இடவேண்டும்.

நாற்றங்காலில் மேலுரம்: நாற்றங்கால் செழுமையாக இல்லாத நிலையில் டிஏபி இடாத பட்சத்தில் நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு 8 சென்டுக்கு 4 கிலோ யூரியா அல்லது 8 கிலோ அம்மோனியம் சல்பேட் உரம் இடலாம். நாற்றின் வளர்ச்சி போதுமானதாக இல்லாதிருந்தால் சென்டிற்கு 2 கிலோ டிஏபியை நாற்றுக்கள் பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு இடவேண்டும்.  வேர்கள் அறுபடும் நிலை இருந்தால் டிஏபி இடாத நாற்றங்காலில் நாற்றுக்கள் பறிப்பதற்கு 1-2 நாட்களுக்கு முன்பு 16 கிலோ ஜிப்சம் இடவேண்டும்.

நெல் நடவு வயல் தயாரிப்பு: நடவு வயலை நன்றாக வளர்த்து உயர்விளைச்சல் தரும்.  எனவே, நிலத்தை பண்படுத்த வேண்டும் நடவு வயல் தயாரிப்பதை எளிதாக கோடை காலத்தில் கோடை மழை கிடைத்த உடன் நிலத்தை 2 அல்லது 3 முறை உழுவது அவசியமாகும்.  கோடை மழை பெய்வதனால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவதுடன் நடவு வயல் தாயார் செய்ய தேவையான பாசன நீரின் அளவும் குறைகிறது.  களைகளும் நீக்கப்படுகிறது.  கோடை உழவு செயது அண்டை வெட்டி, களை இல்லாத புழுதியாக செய்து வைத்தால் சேறு கலக்குவதற்கு சுலபமாக இருக்கும்.  நீரும் பாதியளவு மிச்சமாகும்.  வரப்புகளை உயரமாக அமைத்து நன்றாக அமைத்து நன்றாக பூசி விடவேண்டும்.  அத்துடன் வயலை பரம்பு அடித்து நிலவும் போது மேடு பள்ளம் இல்லாமல் சமமாக இருக்கவேண்டும்.  இல்லையெனில் பயிருக்கு தேவையான நீரும் ஊட்டச்சத்தும், சமச்சீராக கிடைக்காமல் போய்விடும்.

தொழு உரம்: நெல் நடவு வயலில் தண்ணீர் விடுவதற்கு முன்பாக ஒரு எக்டருக்கு  12.5 டன்கள் நன்றாக மக்கிய தொழு உரம் அல்லது குப்பை உரம் இட்டு வயல் முழுவதும் நன்றாக தூவிப்பரப்ப வேண்டும்.  பிறகு தண்ணீர் விட்டு உழுது உரத்தை மண்ணுடன் கலக்க வேண்டும்.  நடவு வயல் தயார் செய்ய பாய்ச்சப்படும் தண்ணீரில் 60-70 சதவீதம் கீழ்நோக்கி வடித்து வீணாகிறது.  ஆகவே இதை தடுக்க 3 முறை கேஜ்வீல் கொண்டு தொழிசேற்று உழவு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.  நெல் நடவு  வயல் தயாரிக்க 200 மி.மீ. தண்ணீர் இருந்தால் போதுமானது.  நடவு வயலில் நீண்ட பக்கங்களுக்கு இணையாக வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.  நீர்பாய்ச்சும்போது வயல் பரப்பில் மத்தியில் வழி ஏற்படுத்தி நீர் பாய்ச்ச வேண்டும்.

பசுந்தால் உரமிட வேண்டிய வயலில் 2.5 செ.மீ. உயரத்திற்கு தண்ணீர் கட்டி எக்டருக்கு 6.25 டன்கள் பசுந்தால் உரம் இட்டு ஒரு வாரம் மக்கவிடவேண்டும்.

அதாவது சணப்பை போன்ற விரைவில் அழுகி மக்கக்கூடிய பசுந்தாள் உரத்தை உழுவதற்கு 7 நாட்கள் முன்பும் மற்ற  பசுந்தாள் உரங்களை உழுவதற்கு 15 நாட்கள் முன்பும் இட்டு 2.5 செ.மீ. ஆழம் தண்ணீர் நிறுத்தி அழுகி மக்கவேண்டும்.  நன்றாக மக்கிய பிறகு உரத்தை பாமீஸ் சட்டர்ன் கொண்டு மண்ணுடன் கலக்கவேண்டும்.

அடியுரமிடல்: நெல்லுக்கு மண் ஆய்வின் பரிந்துரைப்படி உரமிடுதல் நல்லது.  அல்லது பொதுப் பரிந்துரைப்படி குறுகிய கால ரகத்திற்கு ஒரு எக்டேருக்கு 124:50:50 என்ற அளவிலும் மத்திய மற்றும் நீண்ட கால ரகங்களுக்கு 150:60:60 கிலோ என்ற அளவிலும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும்.  இதில் அடியுரமாக 50 மற்றும் 60 கிலோ தழைச்சத்தை முறையே குறுகிய மற்றும் மத்தியகால பயிருக்கு இடவேண்டும். நீண்ட காலப்பயிருக்கு அடியுரமாக 30 கிலோ தழைச்சத்து இட்டாலே போதுமானது.  இந்த தழைச்சத்தை யூரியாவாக இடும்பொழுது ஜிப்சம். வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றையும் சேர்த்து 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும்.  இத்துடன் எல்லா ரகங்களுக்கும் அடியுரமாக 100 சதவீத மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரமாகவும், 50 சதவீதம் சாம்பல் சத்தை பொட்டாஷ் உரமாகவும் இடவேண்டும்.  மேலும், கடைசி வடிவில் 500 கிலோ ஜிப்சத்தை நன்றாக மண்ணுடன் கலக்கச் செய்யவேண்டும்.

உரத்தை மண்ணுடன் கலக்கிய பிறகு வயலை ஒரே சீராக சமன் செய்ய வேண்டும்.  இந்த தொழில் நுட்பம் மிக அவசியமான ஒன்றாகும்.  பிறகு சமன் செய்த வயலில் ஒரு எக்டருக்கு 25 கிலோ துத்தனாக சல்பேட்டை 50 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவவேண்டும்.  மேலும் 10 பாக்கெட் அசோஸ் -பைரில்லத்தை நன்றாக மக்கிய சலித்தெடுத்த 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து நிலதில் பரவலாக தூவவேண்டும்.

தகவல்: லட்சுமிநாராயணன், ஆலோசகர், MSSRF, திருவையாறு.

June 18, 2011 · sakthivel · No Comments
Tags: , ,  · Posted in: நெல்

Leave a Reply

You must be logged in to post a comment.


Powered By Indic IME